அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர்

வேலூர், அக்.1: அரசு வழங்கும் நலத்திட்டங்களை சிறுபான்மையின மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் துறை இயக்குனர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரியம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம், வேலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வேலூர் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, டாம்கோ கடனுதவி திட்டம், சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பதிவு பெற்ற வக்ப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரிகிரம் (PMJVK) திட்டம் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையின மக்கள் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேற்படி திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை சந்தித்து நல்லமுறையில் அத்திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு, அதன் பிறகு கடனுதவிகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றமடைய செய்ய வேண்டும். டாம்கோ கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்களுக்கு குழுக்கடன், கல்விக்கடன் மற்றும் பொதுக்கடன் ஆகிய கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபான்மையின கல்லூரி மாணவர்களுக்கு தேவைப்படுமாயின் விடுதிகள் கட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இடத்தை தேர்வு செய்து அரசிற்கு கருத்துரு அனுப்ப வேண்டும்.

மாவட்டத்தில் சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தை ஊக்குவிப்பு திட்டத்தின் வழங்கும் நலத்திட்ட உதவிபெறும் தகுதியுடையவர்களின் விபரங்களை தயார்செய்து அரசிற்கு அனுப்ப வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள தேவாலயம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்ேடார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீதா வரவேற்றார். கூட்டத்தில் ஆர்டிஓ பூங்கொடி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், இஸ்லாமிய உலமாக்கள், கிறிஸ்தவ போதகர்கள், சிறுபான்மையினத்தை சேர்ந்த பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: