வனத்துறை கட்டுப்பாடுகளை கண்டித்து கோவிலாறு அணை பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்கள்

வத்திராயிருப்பு, அக். 1: வத்திராயிருப்பு அருகே, ஜெயந்த் நகரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், வனத்துறை கட்டுப்பாடுகளை கண்டித்து கோவிலாறு அணைப்பகுதியில் குடியேறியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் அணையில் பட்டுப்பூச்சி நகர் உள்ளது. இதன் அருகே உள்ள ஜெயந்த் நகரில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கும் இன்டன் மரப்பட்டை, நெல்லிக்காய், தேன், நன்னாரி, கடுக்காய், துளசி, ஆவாரம்பூ உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இன்டன் மரப்பட்டையை 2 கிலோவிற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதைக் கண்டித்தும், குடியிருப்பு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். பழுதடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் குடும்பத்தினர் கோவிலாறு அணைப்பகுதியில் குடியேறியுள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை அணைப்பகுதியில் தங்கப்போவதாக தெரிவித்து, அங்கேயே சமையல் செய்து தங்கி வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: