மயிலாடுதுறையில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

மயிலாடுதுறை, செப்.30: மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டிடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வது தெரியவந்தது. இதனையடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78 ன் கீழ் பலவகை மனு எண் 97/ 2016 வெளியேற்று வழக்கினை கோயில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது. இவ்வழக்கின் முடிவில் 2019 பிப்ரவரி 25ம் தேதி இணையான நீதிமன்றத்தின் உத்தரவின் படி ரூபின் சார்லஸ் என்பவரை கோயில் இடத்தை விட்டு வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரூபின் சார்லஸ் கோவில் இடத்திலிருந்து வெளியே செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இடத்தை விட்டு ரூபின் சார்லஸ் வெளியேறவில்லை. அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி, உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டபோது ரூபின் சார்லஸ் ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சுவாதீனம் எடுத்து காம்பவுண்ட் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.

Related Stories: