×

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள்: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம், செப். 30: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிகரித்துள்ள தெருநாய்களால், சாலைகளில் செல்வோர் பயந்துகொண்டே நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. காஞ்சிபுரம் - திருப்பருத்திக்குன்றம் சாலையில் நாய்கள் கூட்டமாக அலைந்து வருகின்றன. மேலும், சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித் திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நோய் தாக்கிய தெரு நாய்கள், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களை துரத்துகின்றன. நோய் தாக்கியதின் காரணமாக வெறிபிடித்துள்ள தெரு நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை கடிப்பதற்காக துரத்துகின்றன. அதனால், வாகனத்தில் செல்லும் நபர்கள் பயந்து நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது.

எனவே, தெரு நாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து, மாநகராட்சி சார்பில், மறைமலைநகர் நகராட்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட  நாய் பிடிக்கும் வாகனம் மூலம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களைப் பிடித்தனர். மேலும், தெரு நாய்கள் பிடிக்கும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருப்பருத்திக்குன்றம் சாலை உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக அலைந்து வருகின்றன. எனவே, அனைத்துப் பகுதிகளிலும் கண்காணித்து தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kanchipuram Corporation ,
× RELATED கவுன்சிலர்கள் புறக்கணித்ததால்...