×

பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்

கிருஷ்ணகிரி, செப்.30: கெலமங்கலம் அருகே வெற்றிலை தோட்டத்தில் பூஜை செய்த தொழிலாளி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் அருகேயுள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(50), தொழிலாளி. இவரது மனைவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு திருமணமாகாத 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை, வழக்கம்போல் மகன்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அன்றிரவு லட்சுமணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, அவரது மகன் சிவக்குமார் வீட்டிற்கு வந்தபோது, தந்தையை காணாததால், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.

அப்போது, வீட்டின் அருகிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் சென்று பார்த்த போது, அங்கு சுமார் ஒன்றரை அடி ஆழ குழியில் உட்கார்ந்த படி, லட்சுமணன் இறந்து கிடந்தார். அந்த பள்ளத்தில் லட்சுமணன் சடலம் அருகே, கோழி பலியிடப்பட்டு இருந்தது. மேலும், எலுமிச்சம் பழமும் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், பூஜை செய்வதற்காக வெற்றிலை தோட்டத்திற்கு லட்சுமணன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு குழியை வெட்டி கோழியை பலியிட்டு, பூஜையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ளச்சாராயம் விற்ற தந்தை மகன் கைது