அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பாதுகாப்பின்றி பாழாகும் பறிமுதல் வாகனங்கள்

அருப்புக்கோட்டை, செப். 30: அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பின்றி பாழாகி வருகிறது. இதை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அருப்புக்கோட்டையில் டவுன் மற்றும் தாலுகா காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நடந்த விபத்துக்களில் சிக்கிய டூவீலர்கள், கார், லாரி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும், வழக்குகள் முடிவடையாத நிலையில், காவல்நிலைய வளாகத்தில் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களிடம் பறிமுதல் வாகனங்கள் ஆகியவற்றை கூட உடனுக்குடன் வழங்காமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. புத்தம் புதிய வாகனங்களும் வழக்கு முடிந்த நிலையில், திரும்ப வழங்காமல் துருப்பிடித்துள்ளன. வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு வெயில், மழையில் நனைந்தும், நாளடைவில் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஏலம் விடும் நடைமுறை வந்தாலும், வாகன உரிமையாளர்களோ, ஏலம் எடுப்பவர்களோ அக்கறை காட்டுவதில்லை. இதேநிலை நீடித்தால் இந்த வாகனங்கள் யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடும்.

எனவே, வாகனங்களை மழையில் நனையாமலும், வெயிலில் காயாமலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அல்லது வழக்குகள் முடிந்து வாகனங்கள் வெளியேறும் வரை, அவைகளை உரிமையாளர்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான வழிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: