×

வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 20,000 பேர் இறப்பு

நாகப்பட்டினம்,செப்.29: உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் முகாமை தொடங்கி வைத்தார். வெளிநாடு மற்றும் நாட்டு இன நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது: வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த லு£யி பாஸ்டர் மறைந்த தினமான செப்டம்பர் மாதம் 28ம் தேதி அவரது நினைவாக 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச ரேபீஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. வெறிநாய் கடித்தால் மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய்க்கு ஆண்டுதோறும் 59000 பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்தவர்கள். நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். வெறி நாய் கடித்த இடத்தில் அரிப்பு அல்லது வலி போன்றவைகள் தென்படும். உணவு விழுங்க முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. எனவே நாய் கடித்தவுடன் அந்த இடத்தை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடித்த நாய் உயிருடன் இருக்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வரும் 2030ம் ஆண்டிற்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றார். உதவி இயக்குநர்கள் அசன்இப்ராகிம், விஜயகுமார், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...