ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறப்பு: எம்.எல்.ஏக்கள், கலெக்டர்கள் பங்கேற்பு

ஆண்டிபட்டி, செப். 29: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58ம் கிராம கால்வாய் பகுதிகளுக்கு எம்எல்ஏக்கள் கலெக்டர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தொடர்மழை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் உபரி நீரும் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் 58ம் கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து வைகை அணையில் இருந்து 58ம் கிராம கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க தமிழக உத்தரவிட்டது. இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகியோர் 58ம் கால்வாய் மதகுகளை திறந்து வைத்தனர். 58ம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும்.

வைகை அணை நீர்மட்டம் 67அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்பதால், வைகை அணை நீர்மட்டத்தை 69 அடியாக நிலை நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 1912 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கரும் என மொத்தமாக 2,285 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் கால்நடை வளர்ப்புக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

58ம் கால்வாய் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், விருதுநகர் வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி, வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன், குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கலைச்செல்வி, தேனி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள், உசிலம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: