விருத்தாசலம் ராஜிவ்காந்தி நகரில் நாககன்னி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

விருத்தாசலம், செப். 28: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் ராஜிவ்காந்தி நகரில் பழமை வாய்ந்த நாககன்னி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் கேட்டில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உள்ளே சென்று பார்த்த போது, கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து காணிக்கை பணம் அனைத்தும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் நிர்வாகத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எண்ணியதில் சுமார் 15 ஆயிரம் பணம் இருந்ததாகவும், கோயில் திருப்பணி செய்ய இருப்பதால் அந்த பணத்தை மீண்டும் அதே உண்டியலில் வைத்துள்ளதாகவும், தற்போதைய மதிப்பு சுமார் 20 ஆயிரம் இருக்கலாம் எனவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: