கொள்ளை போன நகை, பணத்தை மீட்டுத் தர கோரி துணை பேராசிரியர் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்

விருத்தாசலம், செப். 28: விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி (60). சின்னதுரை இறந்து விட்ட நிலையில் மகள்கள் சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் விக்னேஷ் (27) என்ற மகனுடன் வசித்து வருகிறார். சுதா, ராஜலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் ஜெயலட்சுமி மற்றும் விக்னேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி அன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் திருமண செலவிற்காக வைத்திருந்த 2 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கப் பணமும் திருடு போனதால் ஜெயலட்சுமிக்கு திருமணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த தனலட்சுமி அவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் மற்றும் பொதுமக்கள் நேற்று முன் தினம் மாலை விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனலட்சுமி கூறும்போது, எனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு உடனடியாக நகைகளை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் காவல்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடலூர் மாவட்ட எஸ்பி, விழுப்புரம் டிஐஜி, சென்னை டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது நகைகளை மீட்டு தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: