×

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு மாடுகள் முற்றுகை

மஞ்சூர், செப்.28:  மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் முற்றுகையிட்ட காட்டு மாடுகளால் தொழிலாளர்கள் அவதிகுள்ளானார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு, மைனலாமட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் பெருமளவு தேயிலை தோட்டங்கள் உள்ளது. தேயிலை தோட்டங்களை ஒட்டி குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர். தேயிலை பறிப்பில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென தோட்டத்திற்குள் நுழையும் காட்டு மாடுகளை கண்டு அச்சமடையும் தொழிலாளர்கள் உடனடியாக தேயிலை பறிப்பதை கைவிட்டு தோட்டங்களில் இருந்து வெளியேறி வருவது வாடிக்கையாக உள்ளது.

 நேற்று காலை மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் சிலர் இலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது குட்டிகளுடன் காட்டு மாடுகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதை  கண்ட பெண்கள் பீதி அடைந்து தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். நீண்ட நேரமாகியும் காட்டுமாடுகள் அங்கிருந்து செல்லாததால் தொழிலாளர்கள் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளனர். அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய தொழிலாளர்கள் காட்டுமாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெங்கால்மட்டம் சுற்றுபுற ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் காட்டுமாடுகள் கூட்டம், கூட்டமாக தோட்டங்களில் புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன.

Tags : Manjur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...