×

பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பிஎப்ஐ நிர்வாகி கைது மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி


கோவை, செப்.28: கோவையில் பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் ரோட்டில் உள்ள பாஜ அலுவலகம் மீது கடந்த 22ம் தேதி மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகி சதாம் உசேன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் மீது இரு பிரிவினர் இடையே பிளவை ஏற்படுத்துதல் (153 ஏ), ஆட்கள் குடியிருக்கும் பகுதியில் தீ வைத்து தாக்குதல் (436) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சதாம் உசேன் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BFI ,BJP ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...