காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மீண்டும் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம்

காஞ்சிபுரம், செப்.28: தினகரன் செய்தி எதிரொலியால், காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மீண்டும் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதால் மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று  பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் கடந்த செப்.24ம் தேதி காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து, நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் சிவகாஞ்சி போலீசார் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பஸ் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த புறக்காவல் நிலையத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 2 போலீசார், காவல் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும், போக்குவரத்து ரோந்து காவல் வாகனம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ் நிலையத்தில் ரோந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு பயணிகள் அச்சமின்றி சென்று வரலாம் என்றும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: