உடை மாற்றும் அறை, குடிநீர் வசதி செய்யப்படுமா? துணிகளால் மாசுபட்டு வரும் சிப்பிகுளம் கடற்கரை

குளத்தூர், செப். 27: குளத்தூர் அருகே சிப்பிகுளம் கடற்கரையை தூய்மைப்படுத்தி அடிப்படை வசதிகள்  மேம்படுத்தப்படுமா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர்  தீர்த்தக்கரைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே சுமார்  5 கி.மீ. தொலைவில் உள்ள சிப்பிகுளம் கடற்கரை முக்கிய தீர்த்தக்கரையாகத் திகழ்கிறது. தென்தமிழகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாக புகழ் பெற்று  விளங்கிவருகிறது. இங்குள்ள கடற்கரைக்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை என   அமாவாசை நாட்களில் குளத்தூர் மற்றும் விளாத்திகுளம், கோவில்பட்டி  போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

சிப்பிகுளம் தீர்த்தக் கரையில் தங்களது  முன்னோர்களுக்கு எள், பூ, பழம், தேங்காய், புனிதநீர் உள்ளிட்ட பூஜை  பொருட்களை கொண்டு தர்ப்பணம் செய்து விட்டு கடலில் புனித நீராடி அருகிலுள்ள வைப்பாறு காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இப்பகுதி கிராமங்களில்  குடும்பத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை முடித்து அஸ்தியை கரைப்பதற்கு ராமேஸ்வரம் வரை செல்ல முடியாதவர்கள்,  குடும்பத்தோடு சிப்பிகுளம்  கடற்கரைக்கு சென்று பூஜைகள் செய்து அஸ்தியை கடலில் கரைக்கின்றனர்.  சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் திருவிழா காலங்களில் சாமியாடிகள் புனித  நீராடி செல்வதும் இங்குதான்.

இதுபோன்ற சிறப்பும், பழமையும் வாய்ந்த சிப்பிகுளம் கடற்கரை, முறையான பராமரிப்பின்றி கடற்கரைக்கு திதி கொடுக்க  வரும் பொதுமக்கள் கடலில் புனித நீராடிவிட்டு தங்களின் ஆடைகளை அங்கும், இங்குமாக விட்டு செல்வதால் கடற்கரை முழுவதும் குப்பைகள்  குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அழகுநிறைந்த சிப்பிகுளம் கடற்கரை  பொதுமக்கள் விடப்படும் ஆடை கழிவுகளினால் நாளுக்கு நாள் மோசமாக காட்சியளிக்கிறது. சிப்பிகுளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்,  மீன்பிடித் தொழிலே பிரதானமாக செய்து வருகின்றனர்.

சிப்பிகுளம் கடற்கரைக்கு வருவோரில் ஒரு சிலரால் கடற்கரை மாசு அடைவதோடு மட்டுமின்றி  கடலின் வளமும் கெடுகிறது என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு கடற்கரை ஓரங்களில் மீன் குஞ்சுகள்  வளர்ப்பு ஊக்கப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரை மாசினால்  மீன் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால்  மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், சிப்பிகுளம் கடற்கரையின் அவல நிலையை கவனத்தில் கொண்டு உடனடியாக சிப்பிகுளம்  கடற்கரையை தூய்மைப்படுத்தி பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சிப்பிகுளம் கடற்கரையில்  பெண்களுக்கு ஆடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதி மற்றும் தூய்மைப்படுத்தி பராமரிக்க  தூய்மை பணியாளர்களை நியமித்து சிப்பிகுளத்தின் பெருமையும், கடலின்  வளத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: