×

தர்மபுரி மாவட்டத்தில் 19 லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயம்

தர்மபுரி, செப்.26: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 10.76 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யப்படுகிறது. வரும் நிதியாண்டில் 19 லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் என்ற இயக்கத்தை, தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். முதல் கட்டமாக 2.80 கோடி மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 23.80 சதவீத நிலப்பரப்பில் உள்ளது. காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 30 சதவீத வனப்பரப்பு தற்போது உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வனப்பரப்பை மேலும் அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மரக்கன்றுகள் நட்டு வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட வனச்சரகத்தில் பேரிடரில் இருந்து காக்கும் நாட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிபட்டி ஊராட்சி, எள்ளுக்குழி சிவப்பு சந்தன மரத்தோட்டப் பகுதியில் வனத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பல்ல நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் சாந்தி பேசியதாவது: தமிழக முதல்வர் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறையின் சார்பில் ”பசுமை தமிழகம்” இயக்கத்தை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மரம் நடுதல் மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், சிதைந்த வனப்பகுதிகளை மீட்டெடுப்பது ஆகும். விவசாய நிலங்களில் பேரிடர் இருந்து காக்கும் நாட்டு மரங்களை நட வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில், கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பசுமை பரப்பு உள்ள வனப்பகுதி உள்ளது. இருந்தாலும் இதை மேன்மேலும், உயர்த்தி இன்னும் அதிக பசுமை பரப்புகளை உருவாக்க, மாவட்ட நிர்வகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023ம் நிதியாண்டில் 10.76 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அடுத்த 2023- 2024ம் ஆண்டில் சுமார் 19 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதாக தற்காலிக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மாவட்ட அளவில் பல துறைகளை ஒருங்கிணைத்து, மக்களின் பங்களிப்புடன் மற்றும் பொது, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் பல இன மரக்கன்றுகள் நடவு செய்து, இந்த திட்டத்தின் இலக்கை எய்திட மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சப் கலெக்டர் சித்ரா விஜயன், வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்