×

நவராத்திரி விழா தொடங்கியது குமரியில் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து பூஜை

நாகர்கோவில், செப்.27 :  நவராத்திரி விழா தொடங்கியதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து பூஜைகள் தொடங்கினர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்து பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ெகாண்டாடப்பட கூடிய விழா நவராத்திரி விழா ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று (26ம்தேதி) தொடங்கியது. மொத்தம் 9 நாட்கள் விழா நடக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வேண்டியும் விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் 9வது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகும். அதன்படி வருகிற 4ம் தேதி சரஸ்வதி பூஜையும், மறுநாள் (5ம் தேதி) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா நேற்று தொடங்கியதையொட்டி குமரி மாவட்டத்தில் வீடுகள், கோயில்களில் கொலு வைத்து விரதம் தொடங்கினர். நாகர்கோவிலில் வடீவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், கோட்டார், ஏழகரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் பிரமாண்டமான முறையில் கொலு வைத்துள்ளனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில் உள்பட அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களிலும் கொலு வைத்துள்ளனர்.  3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கேற்றபடி அமைத்து, கொலு பொம்மைகள்  அலங்கரித்து உள்ளனர்.

இதில் தசாவதாரம், திருக்கல்யாணம், அறுபடை வீடு,  அஷ்ட லெட்சுமி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து  லெட்சுமி, விஸ்வரூப தரிசன காட்சி, அத்திவரதர், சீமந்தம் செட் பொம்மைகள் என  பல்வேறு விதமான கொலு அமைத்துள்ளனர். அவற்றை மின் விளக்குகளாலும் அலங்காரம்  செய்துள்ளனர். தமிழகத்தில் குலசேகரப்பட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயிலுக்கு வேடமணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், நாகர்கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணிக்கை வசூலித்தனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, நவராத்திரி விழா களை இழந்த நிலையில் இருந்தது. இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

Tags : Navratri ,Kumari ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை