×

விளையாட்டை நேசிக்க வேண்டும்: துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு

காரைக்குடி, செப்.27: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியின் சார்பில் முதுகலை உடற்கல்வி முதலாமாண்டு, இளங்கலை உடற்கல்வி, உடற்கல்வி பட்டயப்படிப்பு, பி.எஸ்.சி உடற்கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜலட்சுமி வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி பரிசுகளை வழங்கி பேசுகையில், கல்வியையும், உடற்கல்வியையும் வள்ளல் அழகப்பர் இருகண்களாக பாவித்ததாலேயே இப்பகுதியில் இக்கல்லூரி துவங்கப்பட்டது. உடற்கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாகும். விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதன் மூலம் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்து விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாலேயே அவர்களால் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை பெற முடிகிறது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நம் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளது பாராட்டுக்கு உரியது. விளையாட்டை அனைவரும் நேசிக்க வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவோரை நாம் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சகிப்புத்தன்மை, தலைமைப்பண்பு, ஒற்றுமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்றார். என்சிசி அதிகாரி வைரவசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சியோல் நன்றி கூறினார்.

Tags : Chancellor ,G. Ravi ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்