×

பேணி பாதுகாக்க வேண்டும் இயற்கை நமக்கு கிடைத்த வரம்: துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு

காரைக்குடி, செப்.24: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி வளாகத்தில் காந்தி கல்வி மையத்தின் சார்பில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டம் துவக்கவிழா நடந்தது. காந்திய கல்வி மைய இயக்குநர் முனைவர் பரிமளா பாத்திமா வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி துவக்கி வைத்து பேசுகையில், மனித வளம் முதல் இயற்கை வளங்கள் வரை கிராமங்களில் உள்ள அத்தனையும் பொக்கிஷங்கள். கிராமங்களில் தான் அதிக வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை நமக்கு கிடைத்த வரம். அதனை பேணி பாதுகாக்க வேண்டும். இன்று நகர மக்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை உணவின் மீதான கவனம் அதிகத்துள்ளது வரவேற்க கூடியது.

ஆசிரியர்களே அடுத்த தலைமுறைக்கு நல்ல செய்திகளையும், நல்ல செயல்களையும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காகத்தான் இம்மூலிகை தோட்டம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலிகையின் மகத்துவத்தையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டியது குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. பசுமையே நம் வாழ்வின் வளமை. புவி வெப்பமாவதைத் தடுக்க பூமித்தாய்க்கு பச்சை ஆடை போர்த்தி மகிழ்வோம். இயற்கையை காக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் குணசேகரன், கல்வியியல் புல முதன்மையர் பேராசிரியர் சுஜாதாமாலினி, தனி அலுவலர் பேராசிரியர் சிவக்குமார், கல்வியியல் துறைத்தலைவர் பேராசிரியர் கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் முனைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Vice Chancellor ,G. Ravi ,
× RELATED மீனவர்கள் மீன் வளர்ப்பில் நவீன...