மாணவிக்கு பாலியல் தொல்லை நெட்டவேலம்பட்டி பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

துறையூர், செப்.24: மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் நெட்டவேலம்பட்டி பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவி செய்ததாக ஒரு ஆசிரியை உள்ளிட்ட இருவர் மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆசிரியை அண்மையில் மண்ணச்சநல்லூரில் உள்ள தன் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் நேற்று முன்தினம் துறை விசாரணை மேற்கொண்டார். அப்போது ஒரு குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் அழைத்து விசாரித்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜூ மற்றும் அவரது ஆதரவு பெற்றோர்கள் அனைத்து மாணவிகளிடமும் விசாரணை செய்ய வேண்டும், பாரபட்சமாக விசாரணை நடத்த முயலும் பள்ளித் தலைமையாசிரியரை மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடில் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுத்தால் வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதாக கூறினர். மேலும் மாணவ, மாணவியர் சிலரை பள்ளிக்குள் அனுப்பாமல் பள்ளி முன்பு திரண்டு நின்று வலியுறுத்தினர். இதனையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் தற்பொழுது மாணவர்கள் தேர்வு நடைபெறுகிறது .உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து இரு தரப்பினரிடம் துறை விசாரணை முறையாக பாரபட்சமின்றி நடத்தப்படும் என்று உறுதி கூறி பெற்றோர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: