×

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.50 லட்சம் விற்பனைக்கு இலக்கு

பெரம்பலூர்,செப்.24: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனைசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீத சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் விற்பனை நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.26.18 லட்சம் மதிப்பில் நடைபெற்றது.

தற்போது இந்த ஆண்டு 2022 தீபாவளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறப்பு திட்டமான \”கனவு நனவு திட்டம்\” என்ற திட்டத்தின்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11வது மற்றும் 12வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வுத் தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20சதவீத தள்ளுபடியுடன் வழங்கப்படும். தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்றவாறு புதுப்புது வண்ணங்களில் டிசைன்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பேன்சி ரக மற்றும் பட்டுப்புடவைகள், அனைத்து வகையான காட்டன் ரக துணிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இதனை மாத சந்தா மூலமாகவும் வாங்கி பயன் பெறலாம். வீட்டு உபயோக பொருட்கள், துண்டு, படுக்கைவிரிப்பு போன்ற அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கிறது. பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கைத்தறி நெசவாளர்களின் வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் நெசவாளர்களுக்கு நேரடியாக லாபம் கிடைக்க கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Diwali ,Co-Optex ,
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்