×

வேளாண் விரிவாக்க மையங்களில் 75.5 மெ.டன் விதை நெல் கையிருப்பில் உள்ளது

அரியலூர்,செப்.24: அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் 75.5. மெ.டன் விதை நெல் கையிருப்பில் உள்ளது என்று அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 578.82 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 804 மெ.டன் யூரியா, 768 மெ.டன் டி.ஏ.பி 609 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2578 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 165 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 228 மெ.டன் என கூடுதலாக 393 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 75.5 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. மானிய விலையில் நுண்ணீர் பாசனத்திட்டம் தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது. சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக்கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் (அ) தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது.

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதியுதவி திட்டம் - விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்த்தின்கீழ் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை செல்போன் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகும். ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும், வேளாண் அறிவியல் நிலையம் சோழமாதேவி மூலம் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விளக்கி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது