செந்துறையிலிருந்து சேலத்திற்கு புதிய பேருந்து வழித்தடம்: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

அரியலூர்,செப்.24: அரியலூர் மாவட்டத்தில் செந்துறை-சேலம் புதிய வழித்தட பேருந்து சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் சார்பில் செந்துறை-சேலம் புதிய வழித்தட பேருந்து சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செந்துறை-சேலம் புதிய வழித்தடப் பேருந்து சேவையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய வழித்தடப் பேருந்து (வழித்தடம் எண்.619சி) தினமும் காலை 5.30 மணிக்கு அரியலூரில் புறப்பட்டு செந்துறை பேருந்து நிலையத்தை வந்தடையும். மீண்டும் இப்பேருந்து செந்துறையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு அரியலூர் வழியாக கொளக்காநத்தம், செட்டிகுளம், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்தை சென்றடையும். இப்புதிய வழித்தடப் பேருந்தின் மூலம் அரியலூர்-செந்துறை மற்றும் செந்துறை-சேலம் தினசரி தலா ஒரு நடை இயக்கப்படுவதால், செந்துறை பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி கிடைப்பதுடன் செந்துறை கிராம பொதுமக்கள் நேரடியாக சேலம் செல்வதற்கு புதிதாக பேருந்து வசதியினை பெறுகிறார்கள்.

எனவே, இதனை பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் சக்திவேல், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: