×

மிகவும் பின் தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் போட்டி நடத்த ஒத்துழைப்பு தரப்படும்

நாகப்பட்டினம், செப்.24: பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு போட்டியாகவும், தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் ஒரு பிரிவு என்று போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்ட வாலிபால் சங்கத்தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார்.நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது: சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு இணையாக நாகப்பட்டினத்தில் வாலிபால் சங்கம் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி உருவாக்க வேண்டும். எனக்கு முன்பு பேசியவர்கள் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பீச் மிகவும் பெரிய அளவில் அமைந்துள்ளது என்றும், தூய்மையாக உள்ளது எனவும் குறிப்பிட்டனர். அதேபோல் மிகப்பெரிய அளவில் பீச் வாலிபால் போட்டியை இங்கு நடத்த வேண்டும் என கூறினர். மிகவும் பின் தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் இதுபோன்ற போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை இந்த மேடையில் அமர்ந்துள்ளவர்களை பார்த்து நான் தெரிந்து கொண்டேன். ராணுவம், ரயில்வே, தபால்துறை என பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

எனவே எதை செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். விளையாட்டில் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. தோல்விகள் தான் ஒரு வெற்றியை நிர்ணயம் செய்கிறது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் போராட வேண்டும். இவ்வாறு கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார். தமிழ்நாடு மாநில வாலிபால் சங்க பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர், நாகப்பட்டினம் மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் கண்ணன், துணைத்தலைவர், ராஜேஷ், புரவலர் ஆல்பிரட்ஜான், இணைச்செயலாளர் சிவராமன், முஹம்மதுதவுபிக் மற்றும் ஞானமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா நன்றி கூறினார். போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடக்கிறது. நாளை (25ம் தேதி) போட்டிகள் நிறைவு பெறுகிறது.

Tags : Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்