×

மைசூருக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா விழாவிற்கு அடிப்படை பணிகள் தீவிரம் வாகனங்களை நிறுத்த காலியிடங்கள் சீரமைப்பு

உடன்குடி, செப். 24: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குப்பைகள் சேருவதை தடுக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழாவிற்கு பிரசித்திப் பெற்றது குலசேகரன்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு  காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பக்தர்களின்றி தசரா விழா நடந்தது. இந்தாண்டு முழு தளர்வுகளுடன் பக்தர்கள் பங்கேற்புடன் தசரா திருவிழா நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (26ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், அக்.5ம் தேதி நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடக்கிறது.

விழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வௌி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் என 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். குடிநீர், கழிவறை, சாலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து குலசேகரன்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து  நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அரசு, தனியாருக்கு  சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் கார், வேன், லாரிகளை நிறுத்துவதற்காக  காலியிடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவி  சொர்ணபிரியா கூறுகையில், ‘பிரசித்திப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பல லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அவர்களின் வசதிக்காக 3க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் பந்தல்  அமைக்கப்படுகிறது. தசரா திருவிழா கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து  சூரசம்ஹாரம் நடைபெறும் வரை 75க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு பஞ்சாயத்திற்குட்பட்ட இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக காலியிடங்களை தூய்மைப்படுத்தும்  பணி நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’  என்றார். நாளை மறுநாள் தசரா திருவிழா கொடியேற்றம் நடக்கும் நிலையில் மாலை அணிந்த பக்தர்கள் வருகை திருவிழா களை கட்டியுள்ளது.

சிதிலமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்படுமா?
சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வேளாண்மை துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த கட்டிடம், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே தசரா திருவிழாவிற்கு முன்பு இக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி
வழக்கமாக தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக கடற்கரையில் தற்காலிகமாக கழிவறைகள் அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு அமைக்கப்படும் கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவதில்லை என்கிற புகார் ஒவ்வொரு ஆண்டும் உள்ளது. எனவே, இந்தாண்டு தற்காலிக கழிவறைகளை பராமரிப்பு மேற்கொள்வது மட்டுமின்றி போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ெவளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே போடுவதை தடுக்க குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.


கோவில்பட்டி அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கோவில்பட்டி, செப்.24: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தையொட்டி சுமார் 4.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கம்பு, பருத்தி, கேழ்வரகு, சூரியகாந்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை விவசாயிகள் விதைப்பதற்கு தயாராகி வருகின்றனர். முதல்கட்டமாக சில கிராமங்களில் மக்காச்சோளம் விதை விதைத்தும், ஊன்றியும் வருகின்றனர். கடந்த 3 ஆண்டு காலமாக கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட முத்துலாபுரம் குறுவட்டம் அயன்ராசாபட்டி, மாவில்பட்டி, மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, முத்துலாபுரம், வெம்பூர், அயன்வடமலாபுரம், நம்பிபுரம் ஆகிய கிராமங்களில் மான் மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இவைகள் இங்குள்ள பாசனக் கண்மாய் மற்றும் வைப்பாற்று புதரில் மறைந்து வசிக்கின்றன. கடந்த 2 வருடங்களாக விளை நிலங்களில் உள்ள மக்காச்சோளம் மற்றும் வெள்ளைச்சோளம் பயிர்களை இரவு நேரங்களில் கூட்டமாக வந்து முழுவதுமாக தின்று சேதப்படுத்தி வந்தன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் மானாவாரி நிலங்களில் ஊன்றிய மக்காச்சோளம் விதைகளை இரவு நேரங்களில் கூட்டமாக பன்றி, மான்கள் வந்து அதை தோண்டி தின்றுவிடுகின்றன. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் மழை காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இந்தாண்டும்  விவசாயிகள் வங்கி மற்றும் தனியாரிடம் வட்டிக்கு வாங்கி சிரமப்பட்டு பயிர் செய்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

Tags : Kulasekaranpatnam ,Mysore ,Dussehra festival ,
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...