×

சுகாதார துறை தொடர்பாக தமிழக முதல்வரிடம் அளித்த கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புகழாரம்

நெல்லை, செப். 24: சுகாதார துறை தொடர்பாக நெல்லை வந்த முதல்வரிடம் அளித்த கோரிக்கைகளுக்கு உடனே நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வரையும், சுகாதார துறை அமைச்சரையும் பாராட்டுவதாக நெல்லையில் நடந்த விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசியதாவது: நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த முதல்வரிடம் நான் கோரிக்கைகள் வைத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னை தொடர்பு கொண்டு பேசி, 2 வாரத்தில் நான் நெல்லை வருகிறேன் என்றார். தொடர்ந்து அவரது உதவியாளரும் என்னை தொ டர்பு கொண்டு அமைச்சர் நெல்லை வருகிறார், அந்த விழாவிற்கு நீங்கள் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதனால் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டாவின் நிகழ்ச்சிக்கு சென்ற நான் அவரிடம் அனுமதி பெற்று இங்கு வந்துள்ளேன். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மூன்று டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றேன். அதற்கான உத்தரவை அமைச்சர் தந்துள்ளார். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரையும், சுகாதார துறை அமைச்சரையும் நான் பாராட்டுகிறேன். எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்பதால் இதை தெரிவிக்கிறேன். கோபுரங்களுக்கு கலசம் போல உங்கள் பணி சிறக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

மகத்தான காலை உணவு திட்டம்
விழாவில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், சுகாதார துறை அமைச்சர் ஒரு நிமிடத்தை கூட விரயம் செய்யாமல் உழைத்து வருகிறார். அவர் திமுகவிற்கு கிடைத்த கொடையாக கருதுகிறேன். நாங்குநேரியில் அதிக கிராமங்கள் உள்ளன. நான் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறேன். அப்போது என்னிடம் கிராம மக்கள், குழந்தைகளுக்கு காலை உணவு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வரை மனதார வாழ்த்துகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதால் மாணவிகள் உயர்கல்வி கற்க ஆவலாக உள்ளனர். நாடே போற்றும் நம்பர் 1 முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். இவ்வாறு ரூபி மனோகரன் பேசினார்.

Tags : BJP ,MLA ,Nayanar Nagendran ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED நயினாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி...