பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் ஜன.26ம்தேதி கும்பாபிஷேகம்

பூதப்பாண்டி, செப். 24:  பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் ஜன.26ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். குமரி  மாவட்டத்துக்கு வந்த தமிழ்நாடு இந்து சமயம் மற்றும்  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க  சுவாமி, சிவகாமி அம்பாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த  கோயிலில்  பிரசன்னம் பார்க்கப்பட்டு  சுவாமியை வேறு இடத்திற்கு மாற்றி  கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. இந்த  பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு சுவாமி சிலை இருக்கும் இடங்களில்  பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்களை எடுத்துவிட்டு, கருங்கற்கள் பதிக்க  வேண்டும் என கூறினார். அப்போது கும்பாபிஷேகம் குறித்து அமைச்சரிடம்  பக்தர்கள் சங்கத்தினர் கேட்டனர். அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி வளர்பிறை  நட்சத்திரமும், பஞ்சமி திதியும் இருப்பதால் அன்றைய தினம் கும்பாபிஷேகம்  நடத்தலாம் என யோசனை தெரிவித்தார்.

23 வருடங்களுக்கு முன்பும் இதேநாளில்  இதே நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து  கோயில் ரதவீதியில் உள்ள பெரிய தேரை பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று.

இந்த தேர் தற்போது தகர கொட்டகையால்  மூடப்பட்டுள்ளது.  எல்லா நேரத்திலும் இந்த தேரை மக்கள் பார்க்கும்  வகையில் கண்ணாடி இழையினால் மூட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் கும்பாபிஷேகத்துக்கும் கமிட்டி  அமைத்து உபயதாரர்கள் மூலம் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர். இதனை அமைச்சர் சேகர்பாபு ஏற்றுக்கொண்டார்.

அப்போது  பேசிய அவர், ‘‘கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த பிப்ரவரி  மாதத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த  கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவித்தார். அமைச்சருடன் திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர், துணை கமிஷனர் ஞானசேகர், பூதப்பாண்டி கோயில் கண்காணிப்பளர் ஆனந்த் , பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், துணை  தலைவர் அணில் குமார் மற்றும்  கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.    

Related Stories: