அஞ்சுகிராமம் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

அஞ்சுகிராமம், செப்.24: அஞ்சுகிராமத்தில் செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (57). இவருக்கு குலசேகரபுரம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் 90 சென்ட் இடம் உள்ளது. அதன் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து, நிபந்தனைகளின் பேரில் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி அலுவலக வளாகத்துக்கு செம்மண் எடுத்து செல்ல அனுமதி பெற்றவர்கள், அதற்கான அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு அசோக்குமாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவருக்கு தெரியாமல் செம்மண் கடத்தினர். இது தொடர்பாக தெரிய வந்ததும் அசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி செம்மண் கடத்தியதாக அழகப்பபுரம் திருமூலநகர் பகுதியை சேர்ந்த அசோக் (40), தெற்கு பகவதிபுரத்தை சேர்ந்த சகாய மதி அரசு (46), ேஜசிபி டிரைவர் திருமூலநகரை சேர்ந்த கவின் (43), அழகப்பபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் (30), லெவஞ்சிபுரத்தை சேர்ந்த அர்ஜூன் (25) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தின் பின்னணியில் அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் சிலர் இருப்பதாக எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத்துக்கு ரகசிய தகவல் சென்றது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது, மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ள லிங்கேஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ள எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: