ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேரு நகரை சேர்ந்த மோசஸ்-லதா தம்பதியின் மகள் ஹரிணி (1). இச்சிறுமி, பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் அவரது பள்ளியில் நடந்த தேர்வில், ஹரிணி பக்கத்து மாணவியின் விடைத்தாளை பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பள்ளி ஆசிரியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத போது, தனது அறைக்குள் சென்ற மாணவி ஹரிணி, புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹரிணி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்களது மகளின் சாவுக்கு அவரது பள்ளி ஆசிரியை தான் காரணம். அவர் திட்டியதாலேயே தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பல்லாவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவியின் சடலத்தை பெற்றுக் கொள்வோம். அதுவரை மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி சென்றனர். மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: