தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம்: தவறான சிகிச்சையால் 3 வயது குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கபெருமாள் கோவில், பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் முருகன் (35). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகிஷா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று குழந்தை மகிஷாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, குழந்தை மகிஷா தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை .30 மணிக்கு திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் போராடிய போதும் சிகிச்சை பலனின்றி குழந்தை மகிஷா பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தைக்கு சாதாரண காய்ச்சல் தான் அடித்தது.

எப்படி வலிப்பு வரும். உங்களது தவறான சிகிச்சையால் தான் குழந்தை உயிரிழந்தது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மருத்துவமனையின் கண்ணாடிகளை கற்களால் அடித்து உடைத்து, தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், தகராறில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: