வேலூர் அடுத்த சித்தேரியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய பெங்களூர் வாலிபர் அதிரடி கைது சிசிடிவி கேமராவால் 24 மணி நேரத்தில் சிக்கினான்

வேலூர், செப்.23: வேலூர் அடுத்த சித்தேரியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய பெங்களூரு வாலிபரை சிசிடிவி கேரமா உதவியோடு ஓசூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(49) தொழிலாளி. இவரது மனைவி கணியம்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, துணிகள் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 10 சவரன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சின்னப்பன் ரமேஷ்பாபு வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ரமேஷ்பாபுவின் வீட்டிற்குள் மர்ம ஆசாமி சென்று வருவது பதிவாகியிருந்தது. அவரை அடையாளங்கள் கண்டறிந்து விசாரணை நடத்தினர். அதில், பெங்களூரை சேர்ந்த வினோத்(36) என்பதும், பிரபல கொள்ளையனான இவன் கடந்த மாதம் திருட்டு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி பெங்களூருக்கு சென்றதும் தெரியவந்தது.

வேலூரில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் வினோத் வேலூருக்கு வந்துள்ளார். அப்போது, சித்தேரியில் ஆட்கள் இல்லாத ரமேஷ்பாபு வீட்டில் கொள்ளையடித்து விட்டு, மீண்டும் பஸ்சில் கொள்ளையடித்த நகையுடன் பெங்களுரூ சென்று கொண்டிருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் எஸ்ஐ சின்னப்பன் மற்றும் போலீசார் வினோத் பிடிக்க பெங்களூரு விரைந்தனர். ஓசூர் அருகே வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த வினோத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கொள்ளையனை பிடித்த போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர். மேலும் பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால், அப்பகுதிகளில் நடைபெறும், திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: