தேசிய புலனாய்வு முகமை சோதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ சாலை மறியல்

தூத்துக்குடி, செப். 23: தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனை நடத்தியதை கண்டித்து தூத்துக்குடி, காயல்பட்டினம், எட்டயபுரம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின்  நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையினர்  தீவிர சோதனை மேற்கொண்டனர். இதே போல் தமிழகத்திலும் சென்னை, கோவை,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைதுசெய்தனர். இதை கண்டித்து  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்,  டபிள்யூஜிசி ரோட்டில் பள்ளிவாசல் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவறிந்து விரைந்து சென்ற தூத்துக்குடி மத்தியபாகம்  எஸ்ஐ முருகப்பெருமாள் மற்றும் போலீசார்  சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ  உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய  அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் தூத்துக்குடி  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் பகுதி தலைவர் அஷ்ரப் அப்துல்லா தலைமையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் என்ஐஏ சோதனைக்கு எதிராக கோஷமிட்டதோடு கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 40 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 18 பேரை  போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

எட்டயபுரம்:  எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பாக நகர எஸ்டிபிஐ சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விளாத்திகுளம் தொகுதி துணைத்தலைவர் காதர் தலைமை வகித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நகரச் செயலாளர் பாருக் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

 செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் நெல்லை- திருச்செந்தூர் பிரதான சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் சமரசப்படுத்தியும் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: