×

வல்லநாடு சிவன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி

செய்துங்கநல்லூர், செப். 23:  தூத்துக்குடி மாவட்டம்,  வல்லநாட்டில் பழமைவாய்ந்த  ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் கோயில் உள்ளது.  தை முதல் ஆனி வரை சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கும் உத்தராயண காலத்தில் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் ஆடி முதல் மார்கழி வரை தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் தட்சிணாயன காலத்தில் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளிலும் இக்கோயிலில் மூலவர் திருமூலநாதர் மீதும் ஆவுடை அம்பாள் மீதும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. அதற்கு ஏற்றபடி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்று காலை 6.03 மணிக்குக் கிழக்கில் உதயமான சூரியக்கதிர்கள் மெல்ல மெல்லக்கோயிலுக்குள் நுழைந்து மூலவர் மீது பட்டு ஒளி வீசியது. இக்கண்கொள்ளாக் காட்சியை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசனம் செய்து சிவ முழக்கமிட்டனர். தொடர்ந்துசுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளை கோயில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் முன்னின்று நடத்தினார். ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

சனி தோஷ நிவர்த்தி தரும் பெருங்குளம் மாயகூத்தர் பெருமாள் கோவில்
பெருங்குளம் என மக்களால் அழைக்கப்படும் இந்த ஊர் இரட்டைத் திருப்பதியில் இருந்து சுமார் 8 கி.மீ  தொலைவில் உள்ளது. பிருகஸ்பதிக்கு காட்சி தந்த பெருமாள் வீற்றிருக்கும்  இந்தத் தலத்தின் பெயர் திருக்குளந்தை என இலக்கியங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பெருமாளின் திருப்பெயர்  வேங்கடவாண். ஆலய உற்சவரோ அழகிய மாயக்கூத்தர். தேவி கமலாவதி தாயார். அவர் குழந்தைவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தலவரலாறு: ஒருமுறை தாடக வனம் என்ற பெருங்குளத்தில் விப்ரகுலத்தைச் சேர்ந்த வேதவிற்பன்னராக  சிறந்து விளங்கிய வேதசாரன் என்பவர், அவரது மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து  வந்தார். எந்நேரமும் பெருங்குளத்து பெருமானை கார்வண்ண வேங்கடவனை  வணங்குவதையே முதன்மையான கடமையாகக் கருதி வாழ்ந்து வந்தார். இதனால் அந்த  தம்பதிகளுக்கு அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார். கமலாவதி என்ற  பெயரோடு அன்னை வளர்ந்து வந்தார். பெருமாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு,  பித்தாகி, அந்த திருமாலையே திருமணம் செய்துகொள்ள விரும்பி கமலாவதி தவம்  புரிந்தாள். அவளின் தவத்துக்கு இரங்கிய மாயக்கூத்தர் தன் கெளஸ்துப  மாலையுடன் கமலாவதியை ஆலிங்கனம் செய்துகொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி  பூச நட்சத்திர நாளில் கல்யாணம் செய்து கொண்டார்.

இமயமலையில் தீய  குணங்களைக் கொண்ட முனிவன் ஒருவன், 1,000 அழகான பெண்களை திருமணம்  செய்துகொண்டால் சாகாவரம் பெறலாம் என்ற நோக்கில் திரிந்துகொண்டு இருந்தான்.  இப்படி தேடித் தேடி ஒரே சமயத்தில் 998 பெண்களைக் கவர்ந்து சென்றான். ஒருநாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி குளத்திற்கு நீராட சென்றபோது அவளையும் கவர்ந்து கொண்ட அந்த முனிவன் இமயம் சென்றான்.  இதனால், மனம் நொந்த வேதசாரன் தன் மனைவியை மீட்டுத் தரும்படியாக திருமாலை  மனமுருக வேண்டினான். தன் பக்தனின் இன்னலைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்  பெருமாள்.

இதேவேளையில் தனது துணையின்றி திருமால்  இமயத்திற்கு நகரவே முடியாது என்று கருடாழ்வார் ஆணவத்துடன் இருப்பதை அறிந்த  இறைவன், கருடனின் கர்வத்தை அடக்க நினைத்து அவரை தமது கால்களின் இடையில்  வைத்துக் கொண்டு அழுத்தியபடி பறந்து சென்று பக்தனின் மனைவி குமுதவதியை  மீட்டு திரும்பியதுடன்  கருடனின் ஆணவத்தை அடக்கினார். இங்கிருந்து  கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு  உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு  உற்சவர் மற்றும் உபயநாச்சியார்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள்.

தோல்வியடைந்த  அந்த முனிவன் சீற்றமாகி, இந்தத் தலத்துக்கு வந்து போர் புரிந்தான்.  பெருமாளும் அவனை அடக்கி அவனுடைய தலையின் மீது கால் பதித்து, நடனம் ஆடினார்.  பெருமாளின் திருவடி பட்டதால் அந்த முனிவன் விமோசனம் பெற்று கந்தர்வனாக  மாறினான். அற்புத நாட்டியம் ஆடிய பெருமாள், தேவர்களால் மாயக்கூத்த பெருமாள்  என்னும் திருப்பெயர் பெற்றார். தம்மை வேண்டும் பக்தர்களின்  வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த தீனதயாளன், இங்கு சனிபகவானின் அம்சத்தை  தன்னுள் தாங்கி அருள்பாலிக்கிறார். இதனால் இங்குள்ள பெருங்குள  தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும்  விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள்  யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம்  என்கிறது திருத்தல புராணம். எனவே வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு  நீங்களும் பெருங்குளப் பெருமாளை தரிசித்து சனிதோஷ நிவர்த்தியைப்பெறலாம்.

இக்கோயிலில்  ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமாள்  திருவேங்கமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க  நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு வைகானச ஆகமப்படி பூஜை நடக்கிறது.  கோயிலின் அருகே பெரியகுளத்தின் நீரே இத்தலத்தின் தீர்த்தம். இக்கோயில்  மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்கு பெருமாளுக்குச் சாற்றிய  பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார் ஆடல்  பறவை என்று கருடனையும் பாடியுள்ளார். குமுதவதியை மீட்க எழுந்து  சென்ற பெருமாள் அதன்பின் பக்தர்கள் குறைதீர உடனே செல்ல வசதியாக நின்ற  கோலத்திலேயே இத்தலத்தில் சேவை சாதிப்பதாக ஐதீகம். பெருமாள் திருவடி தரிசனம்  பெரும் பாக்கியமாகும். அதனாலேயே இத்தலத்தில் அர்த்த மண்டபத்திற்கு வெளியே  பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கும்  வில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் அனை த்து சனிக்கிழமைகளிலும் நவத்திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காய்சினி வேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் வரும் சனிக்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டியும் நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவத்திருப்பதி கோவில்களுக்கு சிறப்பு அரசு பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது ஐதீகம்.

சிறப்பு ஏற்பாடுகள்
புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியாக குடிதண்ணீர் கழிப்பிட வசதி நீண்ட வரிசையில் இடையூறு இல்லாமல்  செல்வதற்கு கம்புகள் கட்டி வரிசையாக செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது மற்றும் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒரு வழி பாதையாக சென்று  வருவதற்கும் வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன     இதே போல் போக்குவரத்தும் ஒரு வழியாகச் சென்று போவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Vallanadu Shiva Temple Moolav ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...