நெல்லையில் 8 வயது சிறுமிக்கு மலேரியா பாதிப்பு பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

நெல்லை, செப். 23: நெல்லையில் 8 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தன. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்திலும் இம்முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களாக நெல்லை மாவட்டம், பாளை ஊராட்சி ஒன்றியம், ராமையன்பட்டி ஊராட்சி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் உள்பட பொதுமக்கள் சிலருக்கு இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராமையன்பட்டியில் ராஜகோபாலபுரம், சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நேற்று, நடமாடும்  மருத்துவ வாகனம் மூலம் சென்ற மருத்துவ குழுவினர் காய்ச்சல் தடுப்பு சிறப்பு  முகாமை நடத்தினர். இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின் தலைமையில் மொபைல் மருத்துவர் சுப, சுகாதார ஆய்வாளர் முத்துராமன், செவிலியர் ஜெரீனாபேகம், தொழில்நுட்ப பணியாளர் ஷில்சா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஒருங்கிணைத்து நடத்தினர். ராமையன்பட்டியில் ராஜகோபாலபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அதில் 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

அதில் ராஜகோபாலாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோல் சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மருத்துவ குழுவினர் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினர். இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் கொசுக்கள் மூலம் பரவுகிறது. மேலும் பருவநிலை மாற்றங்களால் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த காய்ச்சல்களை தடுக்க நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ராமையன்பட்டி பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் 8 வயது சிறுமிக்கு மட்டும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, கொசுப்புழு அழிக்கும் பணி, கொசுவுக்கு புகைமருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மருத்துவ வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

Related Stories: