×

என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை காட்டுமன்னார்கோவிலில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அதிரடி கைது


சேத்தியாத்தோப்பு, செப். 23: காட்டுமன்னார்கோவில் ஜாகீர்உசேன் நகரை சேர்ந்தவர் பயாஸ் அஹமது. எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 6 பேர் மற்றும் நுண்ணறிவு பிரிவை சேர்ந்த 2 பேர் உட்பட 11 பேர் அதிரடியாக பயாஸ் அஹமது வீட்டின் உள்ளே புகுந்து உள்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு, சோதனையில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து வீட்டில் இருந்த அனைத்து செல்போன்களையும் கைவசப்படுத்திய போலீசார் பயாஸ் அஹமது மற்றும் அவரது சகோதரர் இம்தியாஸ் அஹமது (36) ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர். மேலும் வீட்டில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர் பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் அஸ்லம் தலைமையில், சர்புதீன் ஷரிப் மற்றும் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜம்ஜம் நகர் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சுமார் 1 மணிநேரம் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவரின் நிலை குறித்தும் அவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் விளக்கம் கேட்டு அக்கட்சியினர் கோஷம் எழுப்பினர். டிஎஸ்பி தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிவிரைவு போலீசார், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் உட்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போராட்டகாரர்களிடம் சேத்தியாத்தோப்பு சரக காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயாஸ் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் என்ஐஏ இன்ஸ்பெக்டர் நரேஷ் தலைமையில் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பயாஸ் அகமதுவை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  விசாரணை நடத்தப்படும்போது காவல்நிலையம் வெளியே ஏராளமானோர் திரண்டதால் சேத்தியாத்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : NIA ,Kattumannarkovil ,STBI ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்