×

சென்னை-கொல்லம் ரயிலை நின்று செல்ல வலியுறுத்தி சிவகாசியில் ரயில் மறியலுக்கு முயன்ற 2 எம்பிக்கள் உட்பட 300 பேர் கைது

சிவகாசி. செப். 23: சிவகாசி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன் சென்னை-கொல்லம் விரைவு ரயில் நின்று சென்றது. இந்த ரயில் தற்போது சிவகாசியில் நிற்பதில்லை. இது குறித்து எம்பி மாணிக்கம்தாகூர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்தபோது விரைவில் ரயில் நிற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும், ரயில் சிவகாசியில் நின்று செல்லாததால் செப்.22ம் தேதி கொல்லம்-சென்னை ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்படும் என எம்பி மாணிக்கம்தாகூர் அறிவித்திருந்தார். இதன்படி, நேற்று மாலை எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன், எம்எல்ஏ அசோகன், முன்னாள் எம்பி லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, சிவகாசி வர்த்தக சங்கம், வியாபாரிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் என 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் செய்வதற்காக, சிவகாசி ரயில்நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை ரயில்நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், எம்பிக்கள் மாணிக்கம்தாகூர். வெங்கடேசன், எம்எல்ஏ அசோகன் உள்ளிட்டோர் ரயில் நிலையம் முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையம் வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மறியல் செய்வதற்காக கொல்லம்-சென்னை ரயிலில் ஏற வந்த 20க்கும் மேற்பட்டோரை திருவில்லிபுத்தூர் ரயில்நிலையத்தில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனால் 4:45 சிவகாசிக்கு வரவேண்டிய ரயில் 5:20 மணிக்ககு வந்தது. மேலும், ரயிலில் வந்து மறியல் செய்ய முயன்ற பெண் உட்பட 5 பேரை சிவகாசி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது எம்பி மாணிக்கம்தாகூர் கூறுகையில், ‘மத்திய அரசு சென்னை-கொல்லம் ரயிலை சிவகாசியில் நிறுத்தாமல் தொடர்ந்து புறக்கணிக்கிறது. இந்த ரயில் மறியல் போராட்டத்தின் மையக்கருத்து பட்டாசு, எய்ம்ஸ் உட்பட அனைத்திலும் தென்தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்பதுதான். சிவகாசியில் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் ஆரம்பமே. அடுத்த கட்டமாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிகளையும் ஒருங்கிணைத்து, பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

மதுரை எம்பி வெங்கடேசன் பேசுகையில், ‘சென்னை-கொல்லம் ரயில் வழித்தடத்தில் இருக்கும் முக்கியமான தொழில் நகரான சிவகாசியில் ரயில் நின்று செல்லாதது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பலமுறை ரயில்வே அதிகாரிகளிடமும் அமைச்சரிடமும் நாடாளுமன்றத்திலும் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால், இந்த மறியல் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ரயில் நிலையத்தையும் ரயிலையும் தனியாருக்கு விற்க தயாராக இருக்கும் மத்திய அரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயிலை நிறுத்த மறுக்கிறது’ என்றார். விருதுநகர் எஸ்.பி மனோகரன், ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டிஎஸ்பிக்கள் சபரிநாதன், பாபுபிரசாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Sivakasi ,Chennai ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து