×

கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க காவிரி கூட்டு குடிநீர் குழாய் சீரமைப்பு அதிகாரிகள் குழு நடவடிக்கை

சாயல்குடி,செப்.23: கடலாடி ஒன்றியத்தில் காவிரி கூட்டு குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுச் செல்லும் நடவடிக்கையில் அதிகாரிகள் குழு ஈடுபட்டு வருகின்றனர். கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த 2009-2010ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தடையின்றி நடந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பு இல்லாதது, முறைகேடான இணைப்புகள் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் மேடான பகுதியிலுள்ள கிராமங்கள், நீண்ட தொலைவிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் முறையாக செல்ல வில்லை.

சாலை மார்க்கம் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே தண்ணீர் சென்று வருகிறது. இதனால் பல்வேறு கிராமமக்கள் தள்ளுவண்டிகள் குடங்களை வைத்துக் கொண்டு, சாலை மார்க்கமாக செல்லும் பிரதான குழாயில் தண்ணீரை பிடித்து வருகின்றனர். சில ஊர்களில் உள்ளூர் நீர் ஆதாரங்களான கிணறு, போர்வெல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். சில கிராமங்களுக்கு எந்தவொரு குடிநீர் ஆதாரமும் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனையடுத்து முதுகுளத்தூர் சட்டபேரவை தொகுதி எம்.எல்.ஏவான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆகியோரின் அறிவுறுத்ததால் தடையின்றி தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுமக்கள், பஞ்சாயத்து தலைவர்களின் மனுக்களின் அடிப்படையில் குழாய்களை சீரமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக ஏர்வாடி பஞ்சாயத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக இளஞ்செம்பூர், கண்டிலான் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக குழாய்கள் சீரமைத்தல், முறைகேடான இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டித்து கிராமங்களிலுள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி, தெருக் குழாய்கள் மூலமாக சீரான குடிநீர் வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி கடலாடி யூனியன் பி.டி.ஓ.கள் அண்ணாதுரை, ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் குமரேசன் மற்றும் வருவாய்துறை, காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காவரி கூட்டு குடிநீர் குழாயினை சேதப்படுத்தினாலோ, அனுமதியின்றி முறைகேடாக குழாய் இணைத்தால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Cauvery Joint Water Pipe Repair Officials Committee ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...