×

மீனாட்சி கோயில் தீ விபத்து வழக்கு முடித்து வைப்பு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, செப். 23: மதுரை மீனாட்சி கோயில் தீ விபத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை சிம்மக்கல்ைல சேர்ந்த சுடலைமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கோயிலின் 5 நுழைவு வாயில் மற்றும் கோயிலுக்குள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தீப்பெட்டி, சிகரெட், பீடி உள்ளிட்ட தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதியில்லை. இந்நிலையில், கடந்த 2.2.2018ல் ஏற்பட்ட தீவிபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவு சேதமடைந்தது.

ரூ.52 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. 56 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமானது. இவ்விபத்து குறித்து ஆய்வு செய்த 12 பேர் கொண்ட வல்லுநர் குழு விசாரணை நடத்தி அரசுக்கு அளித்த அறிக்கையில், இந்த தீ விபத்துக்கும், சேதத்துக்கும் கோயில் இணை ஆணையர் மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகம விதிகளை பின்பற்றாமல் கோயில் வளாகத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கியதே தீ விபத்துக்கு காரணமாகும்.
மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்து தொடர்பாக கோயில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். போலீசாரின் விசாரணை முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில், தீவிபத்திற்கு யாரும் காரணமில்லை என்பதால் வழக்கு கைவிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.இம்மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Meenakshi ,ICourt ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...