×

திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்றின் தாங்கு பாலம் இடிந்து விழுந்தது

திருவிடைமருதூர், செப். 23: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்றின் கூட்டுக் குடிநீர் திட்ட தாங்கு பாலம் மற்றும் குடிநீர் குழாய் பெரும் பகுதி இடிந்து விழுந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தை கொண்டு கொள்ளிடம் - வேளாங்கண்ணி கூட்டுக் குடிநீர் திட்டம் 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் சேகரிக்கும் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய்களைத் தாங்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 18 தூண்கள் கொண்ட சிறிய பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. கொள்ளிடம் ஆற்றில் இந்த ஆண்டு அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டதால் கூட்டுக் குடிநீர் குழாய் செல்லும் பாலத்தைத் தாங்கும் ஒரு தூணின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த தூணுடன் பாலமும் 50 அடி நீளத்துக்கு கடந்த18ம் தேதி நள்ளிரவு இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால் குடிநீர் குழாய் மட்டும் ஆபத்தான நிலையில் அந்தரத்தில்தொங்கியது.

இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு அம்மையப்பன் நீரேற்று நிலையத்திலிருந்து தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து 19ம் தேதி முதல் இடிந்து விழுந்த தூண் மற்றும் பாலத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் சில தாங்கு தூண்கள் இடிந்து விழுந்தது. மேலும் குடிநீர் குழாயிலும் முறிவு ஏற்பட்டு பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் செய்ய முடியாமல் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் தாங்கு பாலத்தையும், குடிநீர் குழாய்களையும் புதிதாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

Tags : Kollidam River ,Vandaiyar reserve ,Tiruppanandal ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்