×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை சமாளிக்க தயார்நிலை சித்த மருத்துவ அலுவலர் தகவல்

புதுக்கோட்டை, செப். 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவி வரும் காய்ச்சல்களை எதிர்கொள்ள அனைத்து சித்த மருத்துவமனைகள், ஹோமியோபதி மருத்துவமனைகள் மற்றும் இயற்கை மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் காமராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு பருவமழை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவலாக காணப்படுகின்றன. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 சித்த மருத்துவமனைகளும், 6 ஆயுர்வேத மருத்துவமனைகளும், 3 ஹோமியோபதி மருத்துவமனைகளும், 5 யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன.

மழைக்காலக் காய்ச்சல்களை எதிர்கொள்ள இந்த மருத்துவமனைகளில் நிலவேம்புக் குடிநீர் தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் வழக்கமாக தோல்நோய், சர்க்கரை நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைகேட்பு நாளில் கூடும் பொதுமக்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் செப். 26ம் தேதி திங்கள்கிழமை அனைத்து சித்த மருத்துவமனைகள், ஆயுர்வேத, ஹோமியோபதி, இயற்கை மருத்துவமனைகளிலும் காலை 8 மணி முதல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Monsoon fever outbreak ,Pudukottai ,District Medical Officer ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்