×

புதுகை முதன்மைக்கல்வி அலுவலக கூட்டரங்கில் மக்கள் நலத்திட்டம், சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

புதுக்கோட்டை, செப். 23: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்ட பின் பேசியதாவது. சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த பல்வேறு வீரர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருப்பது கடந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. உலகம் போற்றும் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராட கற்று தந்துள்ளார். அந்த வகையில் யாருடனும் நாம் சண்டைக்கு செல்லாமல் அகிம்சை
வழியில் போராட கற்றுக் கொண்டுள்ளோம் அதே வேளையில் எவரேனும் நம்மிடம் சண்டைக்கு வந்தால் அதனை சமாளிப்பதற்கான ஆற்றல் நம் நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது.
மேலும் அகிம்சை, சகிப்புதன்மை, ஒற்றுமை, மதசார்பின்மை போன்றவற்றை பறைசாற்றும் வகையில் இந்த அரியவகைப் புகைப்படக் கண்காட்சி சான்றாக அமைந்துள்ளது என பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது. நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறுகளை மிக நுணுக்கமாக உள்ளடக்கி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை புகைப்பட கண்காட்சியை இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் செய்திகளாக மட்டுமல்லாமல் எண்ணற்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது என தெரிவித்தார். முன்னதாக கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருச்சிலைக்கு அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கண்காட்சியை திறந்து வைத்து அரங்கில் அமைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், காச நோய் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள், இந்திய அஞ்சல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து சுதந்திர தின அமிர்த பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஒவியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மத்திய மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை , புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் ஆனந்தபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : People's Welfare Scheme ,Freedom Fighters Photo Exhibition ,Primary Education Office ,Puducherry ,
× RELATED இடைநிலை ஆசிரியர்கள் மறியல்