×

திருமருகல் அருகே மூட்டையாக கட்டி ஆற்று மணல் திருட்டு

நாகப்பட்டினம், செப்.23: திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றங்கரையில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பகுதியில் திருமலைராஜன் ஆறு செல்கிறது. அப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கு இந்த ஆறு பயன் பெறுகிறது. இவ்வாறு விவசாயத்திற்கு பயன் பெறும் திருமலைராஜன் ஆற்றின் போலகம்- தென்பிடாகை இடையே ஆற்றங்கரையில் ஒரம் பள்ளம் தோண்டி இரவு நேரங்களில் மணல் திருடப்படுகிறது. இதனால் மழை காலங்களில் ஆற்றின் கரை வழுவிழந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
திருமருகல் பகுதியில் பாசனத்திற்கு பயன்படும் ஆறுகளில் திருமலைராஜன் ஆறு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து பிரிந்து வரும் இந்த ஆறு திருமருகல் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசன உதவி செய்கிறது. இவ்வாறு பாசனத்திற்கு பயன்பெறும் திருமலைராஜன் ஆற்றின் கரையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணலை வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து விடுகின்றனர். பின்னர் அந்த மணலை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இதுபோல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. ஆற்றின் கரையோரம் வைத்துள்ள 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையும் உள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் மணல் திருடி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆனால் சில நேரங்களில் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் ஆற்றின் கரையில் பள்ளம் தோண்டி சாக்கு மூட்டைகளில் கட்டி மணலை திருடி செல்கின்றனர். எனவே போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Tirumarukal ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்