(தி.மலை) விழுப்புரத்தில் கஞ்சா வியாபாரியை கைது செய்து போலீசார் அதிரடி வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் கீழ்பென்னாத்தூரில் இளைஞர்களுக்கு விற்பனை

கீழ்பென்னாத்தூர், செப்.22: கீழ்பென்னாத்தூரில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவரை விழுப்புரத்துக்கு சென்று கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட போலீசார், வீட்டில் பதுக்கிய 2 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பி கார்த்திகேயனுக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின்படி, எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கே.தயாளன் தலைமையில், எஸ்ஐக்கள் டி.ராஜீவ்காந்தி, ஆர்.ராஜசேகரன், தனிப்படை தலைமை காவலர்கள் வி.செல்வகுமார், கே.துரை உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான செவரம்பூண்டி கிராமத்தில் தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஒரு இளைஞரை சோதனை செய்தனர். அவரிடம் 2 சிறிய கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை ரோட்டுத்தெருவை சேர்ந்த பாலாஜி(25) என்பவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை புகைப்பதற்காக வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், தனிப்படை போலீசார் அவலூர்பேட்டைக்கு விரைந்து சென்று பாலாஜியை மடக்கி பிடித்து, அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலாஜியை கைது செய்த தனிப்படை போலீசார், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதவி ஆய்வாளர் முனீஸ்வரனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: