×

நீடாமங்கலத்தில் 10 ஊராட்சிகளில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்; 43,000 ஏக்கரில் சம்பா, தாளடி பணிகள் துவங்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி

நீடாமங்கலம், செப்.22: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு சம்பா மற்றும் தாளடியில் 43,000 ஏக்கர் விவசாய பணிகள் துவங்கியது. மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கி அதிக மழை பெய்ததால் கர்நாடகா அணைகள் நிரம்பி லட்சக்கணக்கான கன அடி வரத்து வந்தது. இங்கு திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் கூட்டியே கடந்த மே மாதம் 24ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார்.

அந்த நீர் காவிரியாற்றில் வந்து கல்லணை வந்தடைந்தது. அங்குள்ள வெண்ணாற்றில் திறந்த நீர் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணைக்கு (கோரையாறு தலைப்பு) வந்தது. இங்கு பாமனியாறு, வெண்ணாறு, கோரையாறு என மூன்று ஆறுகள் பிரிகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் பாமனியாற்றில் 38 ஆயிரத்து 357 ஏக்கரிலும், வெண்ணாற்றில் 94 ஆயிரத்து 219 ஏக்கரிலும், கோரையாற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரிலும் விவசாயிகள் பாசன வசதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் நடப்பு 2022-2023ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் 34,802 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் சம்பா, தாளடி பருவத்தில் 43,250 ஏக்கரும், கோடை பருவத்தில் 12,500 ஏக்கரும் நெல் சாகுபடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் வீதம் ரசாயன உரங்கள் 100 சதம் அரசு மானியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுப்பயிர் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் வீதம் கேழ்வரகு, நிலக்கடலை அல்லது உளுந்து சாகுபடி செய்ய 50 சதவீத மான்யத்தில் விதைகள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் காரணிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

குறுவை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு 65.09 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 சதவீத மான்யத்தில் விதை கிராம திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 சப்1 , ஸ்வர்னா சப்1 மற்றும் எம்.டி.யு.7029 போன்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டுள்ளன. நெல் மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் மற்றும் வரப்பு பயிருக்கான உளுந்து விதைகள், மழைகாலங்களில் வேளாண் விளைபொருட்களை உலர்த்தி பாதுகாக்க தார்பாய்கள் ஆகியவை நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூர் மற்றும் கருவாக்குறிச்சி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நீடாமங்கலம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு தென்னங்கன்றுகள், சிங்க் சல்பேட், ஜிப்சம் மற்றும் பண்ணை கருவிகள் கிட் போன்றவைகள் அரசின் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளன. இவைகள் வேளாண்மை - உழவர் நலத்துறையில் இவ்வட்டாரத்தில் உள்ள 6 வேளாண்மை உதவி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. நீடாமங்கலம் வேளாண் மை உதவி திட்ட இயக்குனர் கூட்டு முயற்சியில் பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் வீதம் ரசாயன உரங்கள் 100 சதம் அரசு மானியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Needamangalam ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...