பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை வனத்துறை எச்சரிக்கை

பட்டிவீரன்பட்டி, செப். 22:  பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மலைப்பகுதியில் கொட்டிய தொடர் கனமழை காரணமாக தண்ணீர் அதிகளவில் விழுகின்றது. மேலும் பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனைச் சுற்றியுள்ள மலைக் கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் புல்லாவெளி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இந்த அருவி சுற்றிலும் மலைகள் சூழ்ந்து சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில் இந்த அருவியில் தண்ணீர் விழும் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். போதிய பாதை வசதி இல்லாததாலும், பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து பலியாவது தொடர் கதையாகி வருகின்றது. இம்மாதம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த என்ஜீனியர் தவறி விழுந்து பலியானார். இவரது உடல் 5 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காரணத்தினால் வனத்துறை சார்பில் அருவியின் நுழைவு பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: