×

மானாமதுரையில் கால்நடை மருத்துவக்கல்லூரி விரைந்து அமைக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை

மானாமதுரை, செப்.22: மானாமதுரையில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திருப்புவனம், இளையான்குடி தாலுகாக்கள் உள்ளன. இந்த மூன்று தாலுகாக்களிலும் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 140 கிராம ஊராட்சிகளில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். திருப்புவனம், இளையான்குடி தாலுகாக்களில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால் மானாமதுரை தாலுகாவில் கலை அறிவியல் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் என எந்தவித உயர்படிப்பு கல்விநிலையங்களும் இல்லாத நிலையில் தமிழக அரசு மானாமதுரையில் கால்நடை மருத்துவக்கல்லூரி துவக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பும் விவசாயமும் உள்ளது. ஆற்றுப்பாசனத்தில் வரும் நீரை வைத்து நடைபெறும் விவசாயம் போக வான்மழையை நம்பி ஏராளமான தரிசு நிலங்கள், புஞ்சை நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளதால் கால்நடை வளர்ப்பு எளிதாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாட்டினங்களின் பூர்வீக கிராமமாக புலிக்குளம் மானாமதுரை தாலுகாவில் தான் உள்ளது. இந்த மாட்டினங்களை பாதுகாக்க மானாமதுரை இளையான்குடி ரோட்டில் மாங்குளம் விலக்கு பகுதியில் புலிக்குளம் கால்நடை ஆராய்ச்சி மையம் ரூ.2 கோடி செலவில் கடந்த 2019ம் ஆண்டு துவக்கப்பட்டது.

100 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டு துவங்கியுள்ள இம்மையத்தில் நூற்றுக்கும் அதிகமான புலிக்குளம் மாட்டினங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் மையத்தை விரிவாக்கம் செய்யவும் மையத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு பண்ணை தீவனப்புல் வளர்க்கவும் தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆராய்ச்சி மையத்தை பயனுள்ளதாக மாற்ற அங்கு கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர்.

கடந்த 22 ஆண்டுகளாக மானாமதுரை அதிமுக வசம் இருந்தும் கலை அறிவியல் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற எந்தவித உயர்படிப்பு கல்விநிலையங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த முறை திமுக முதன்முறையாக வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற தொகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைந்தால் இப்பகுதி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் மாதவன் கூறுகையில், மானாமதுரையை சுற்றியுள்ள ராஜகம்பீரம், கொம்புக்காரனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூர், பெரியகோட்டை, சின்னக்கண்ணனூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இது தவிர மானாமதுரை நகரில் பத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

மானாமதுரை சுற்றுவட்டார பகுதி நூற்றாண்டு காலமாக கால்நடை வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானமாக இருப்பதால் இப்பகுதி இளைஞர்களுக்கு கால்நடை மருத்துவம் படிப்பதில் ஆர்வம் அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் இருந்து சராசரியாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்து நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். மானாமதுரையில் கல்லூரி இல்லாததால் மதுரை, கோவை, சென்னை, காரைக்குடி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உயர்கல்வியை பெற அங்கு சென்று தங்கி படித்து வருகின்றனர். நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் செலவழித்து அங்கு சென்று தங்கி படிப்பது எட்டாக்கனியாக உள்ளது. எனவே மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைத்தால் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சியுடன் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளை பற்றி படித்து இப்பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைந்து பண்ணையம் அமைப்பதற்கும், சுயதொழில் செய்வதற்கும் மற்ற மாநிலங்களில் சென்று பணியாற்றவும் வசதியாக அமையும் என்றார்.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...