×

அம்பத்தூர் தொகுதியில் 1210 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

அம்பத்தூர்: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை 1210 மாணவ, மாணவிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர் ராமன், மற்றும் செல்வ கணேசன், 7வது மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவை வரவேற்கும் விதமாக பள்ளி மாணவிகளின் கண்கவர் வரவேற்பு பாடல் நடன நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், கொரட்டூர், முகப்பேர், அம்பத்தூர், பாடியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 1210 மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர். மேலும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளையும் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபுவிடம், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ‘‘ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் இதுபற்றி தன்னிடம் கூறியிருப்பதாகவும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரியிடம் கலந்து பேசிவிட்டு அதற்கான இடம் கட்டமைப்பு வசதி அனைத்தையும் சரி செய்த பிறகு மக்களின் கோரிக்கைபடி ஆண்கள் பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். மேலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி வசம் உள்ள இடத்தின் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதுபற்றி கருத்து தெரிவித்த அவர், ‘‘ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அந்த இடத்தில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஏதாவது இருப்பின் விரைந்து ஆராயப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆண்கள் பள்ளி கொண்டுவர சீரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார்.

Tags : Minister ,Shekharbabu ,Ambattur ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...