தமிழகத்திலேயே உப்பு உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக விளங்கிய தூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பளத் தொழில்

* தொழிலாளர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம்

* உப்பின் தரம் குறைவதால் ஏற்றுமதி பாதிப்பு

ஸ்பிக்நகர், செப். 21: தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்து வரும் உப்பளத் தொழிலால் தொழிலாளர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் இன்றி வறுமையில் வாடும் நிலைக்கு உப்பளத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு தலையிட்டு உப்புக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முத்து மற்றும் உப்பு இரண்டும் பல ஆண்டுகளாக மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

இதில் முத்து குளிக்கும் தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. இரண்டாவது உப்பு உற்பத்தி மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அனல்மின் நிலையங்கள்,  பெருகி வரும் ரசாயன தொழிற்சாலைகள், வாகனத்தில் இருந்து வெளிப்படும் மாசு காரணங்களால் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. நாம் அன்றாடம் உண்ணும் அனைத்து உணவுகளுக்கு உப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பை நம்பியே அநேக தொழிற்சாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள், மீன்களை பதப்படுத்துதல் மற்றும் கெமிக்கல் தொடர்பான தொழில்களுக்கு உப்பு அதிகளவில் பயன்படுகிறது.

நம் நாட்டின் பயன்பாட்டுக்கு தேவையான உப்பு பெரும்பாலும் நமது நாட்டிலேயே தயாராகிறது. இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முதலாவதாக குஜராத்தும், அதற்கு அடுத்தபடியாக தமிழகமும் விளங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மற்ற மாவட்டங்களில் விளையும் உப்பினை விட தூத்துக்குடி மாவட்டத்தில் விளையும் உப்பு சுவை மிக்கதாக விளங்குகிறது. இதனால், தூத்துக்குடி உப்புக்கு மவுசு அதிகம். இதன் காரணமாகவே தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்பட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளத்தூர், வேப்பலோடை, தருவைக்குளம், முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு உள்பட கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில் இருந்து நேரடியாக உப்பளங்களுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் பெருகிவரும் அனல்மின் நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், குடோன்களால் கடல் நீரை அப்படியே கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் நீர் கொண்டு வருகின்றனர்.

மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைகள், பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் புழுதி எல்லாம் உப்பளத்தின் மீது படிந்து விடுகிறது. இதனால் உப்பின் தரம் வெகுவாக குறைந்து விடுகிறது. உப்பும் மாசுபடுகிறது. ஏற்கனவே போதுமான விலையில்லாமல் தடுமாறும் உப்பு உற்பத்தியாளர்களை இந்நிகழ்வு வெகுவாக பாதிக்கிறது. பெரும்பாலும் உப்பளத்தில் வேலைக்கு செல்பவர்கள், நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் வேலைக்கு சென்று விடுவார்கள். காலையில் வெயில் ஏற துவங்கியவுடன் உப்பளத்தில் வேலை செய்ய முடியாது. அந்தப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும்.

ஏற்கனவே உப்பள தொழிலாளர்களுக்கு ஆண்டில் பாதி நாட்கள்தான் வேலை இருக்கும். மழை காலங்களில் வேலை இருக்காது. இந்த சூழ்நிலையில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் உப்பு உற்பத்தி அறவே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உப்புத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வருவாயின்றி வறுமையில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உப்பு உற்பத்தி தொழிலை காக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உப்பள தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் கோயில்மணி கூறுகையில், உப்புக்கு அரசு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஏனெனில் மழைக் காலங்களில் விலை ஏற்றமாகவும், மற்ற நாட்களில் அதன் விலை குறைவாகவும் இருக்கிறது. முந்தைய காலங்களில் ஆண்டுக்கு 9 மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. இதன் மூலம் வருவாயும் கிடைத்து வந்தது. தற்போது 6 மாதம் மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. மற்ற காலங்களில் உப்பு உற்பத்தி செய்ய முடிவதில்லை. பிற மாநில உப்பு வருகையால் தமிழகத்தில் உப்பின் விலை குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூர் உப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும், என்றார்.

Related Stories: