நெல்லையில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா பொதுமக்களுக்கு தினமும் நலத்திட்டங்களை அறிவித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேச்சு

நெல்லை, செப். 21: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன்பெறும் வகையில் தினமும் ஒவ்வொரு திட்டங்களை அறிவித்து வருகிறார் என நெல்லையில் நடந்த அரசு பொருட்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி வருடந்தோறும் நடந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அரசுப் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகராட்சி பொருட்காட்சித் திடல் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தின் அருகே அண்ணா கலையரங்கத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சுற்றுலாத்துறை, வனத்துறை,  மின்வாரியதுறை, விவசாய துறை, அறநிலையத்துறை, போக்குவரத்துறை, ஆதிதிராவிடர்  நலத்துறை உள்ளிட்ட 32 துறை ஸ்டால்களை தமிழக சபாநாயகர் அப்பாவு, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். நெல்லை கலெக்டர் விஷ்ணு வரவேற்றார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு தமிழக அரசு மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பொருட்காட்சியிலுள்ள ஸ்டால்களை கண்டுகளித்து அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.  பின்னர் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2ஆண்டுகளாக அரசு பொருட்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் சேலம், மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டது. நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

பொருட்காட்சியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களை  பொதுமக்கள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் பொதுமக்களுக்கு அறிவித்து வரும் திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம். பொருட்காட்சி மைதான இடத்திற்கு கலெக்டர் தீர்வு காண்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, திமுக இளைஞரணி ஆறுமுகராஜா, மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக அமைச்சர் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Stories: