×

காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி காய்கறி சந்தை அமைக்க வேண்டும் பொதுநல அமைப்பினர் மனு

காரியாபட்டி, செப். 21: காரியாபட்டியில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, காய்கறி சந்தை அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள், பேரூராட்சி தலைவர் செந்திலிடம் மனு அளித்தனர். காரியாபட்டி பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது அடிப்படை தேவைகளான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், காரியாபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய பெரும் நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், காரியாபட்டியில் காய்கறி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு எதிர்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் முன்புறம் அமைந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஎம் டிரஸ்ட் சார்பில் நிறுவனர் அழகர்சாமி மற்றும் இன்பம் பவுண்டேஷன் சார்பில் விஜயகுமார் உட்பட பல்வேறு பொதுநல அமைப்புகள் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில், திமுக பேரூராட்சி சேர்மன் செந்திலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, 6வது வார்டு கவுன்சிலர் சங்கரேஸ்வரன், 9வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி தலைவர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : Kariyapatti ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...