நொய்யல் ஆற்றின் கரையோர முள்வேலி: மரங்களை அகற்ற நடவடிக்கை

காங்கயம், செப்.21: காங்கயம் பகுதியில் சமூக விரோத நபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, காங்கயம் அருகே நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி மரங்களை அகற்ற வேண்டும் என காங்கயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசுத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார்.

காங்கயம் பகுதியில் அண்மைக் காலங்களில் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள், கொலை உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. காங்கயம் ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெறுவதோடு, மற்ற இடங்கள் வெட்டவெளிப் பிரதேசமாக இருப்பதால், காங்கயம் பகுதி வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் முள்வேலி மரங்கள் அடங்கிய புதர்களை சமூக விரோத நபர்கள் பதுங்குவதற்கும், சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருவதாக, இப்பகுதி மக்கள் காங்கயம் காவல்துறையில் புகார் தெரிவித்து வந்தனர்.

திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாக நொய்யல் ஆறு இருப்பதால், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் காவல்துறையினருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு காங்கயம் காவல்துறையினர் சென்றால், அவர்கள் ஆற்றைக் கடந்து அந்தப் பகுதிக்கு சென்று தப்புவதும், சென்னிமலை போலீசார் சென்றால், இந்தப் பகுதிக்கு குற்றவாளிகள் தப்பி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், காங்கயம் ஒன்றியப் பகுதியில் கத்தாங்கண்ணி பகுதி முதல் பழையகோட்டை ஊராட்சி வரையிலான 12 கி.மீ. தூரத்திற்கு நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி புதர்கள் மற்றும் முள்வேலி மரங்களை தன்னார்வலர்களின் உதவியோடு வெட்டி அப்புறப்படுத்துவதற்கு காங்கயம் காவல்துறை முன்வந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முள்வேலி மரங்கள்  வெட்டப்பட்ட பின்னர் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தெரிவித்தார். மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் தலா 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீர்மானிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காங்கயம் ஒன்றியப் பகுதியில் பணி மேற்கொள்வதற்கான சாலைகளைத் தேர்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்தரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சித் துறைகளின் உதவிப் பொறியாளர் வசந்தாமணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள் சரவணன், கோகுல், காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: